Presidential Election 2017 Shiv Sena bats for candidate who can seal country fate as Hindu Rashtra

நாட்டின் அடுத்த குடியரசு தலைவராக இந்துத்துவாவை தீவிரமாக பின்பற்றும் ஒருவரே வர வேண்டும். அவர்தான் ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் இருந்து இந்துக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சிவசேனா கட்சி அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தான் குடியரசு தலைவராக தேர்வுசெய்யப்பட வேண்டும். அவரால், இந்துக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மோகன் பகவத்துக்கு சிவசேனா தீவிரமாக ஆதரவு கொடுத்துவருகிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பகவத்தே சரியான தேர்வு என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்தார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.



இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான “சாம்னா”வில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது;
குடியரசு தலைவர் பதவியில் இந்துத்துவா ரப்பர்ஸ்டாப்தான் அமரவைக்கப் படவேண்டும். ஹிந்து ராஷ்டிரா முத்திரை கொண்ட ஒருவரால்தான் “ராம ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் பிரிவு, பொது சிவில் சட்டம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்க முடியும்”

இதற்கு முன் மதச்சார்பற்ற தலைவர்கள் என்ற பெயரில் மதச்சார்பற்ற ரப்பர் ஸ்டாம்ப்புகள்தான் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இருக்கிறார்கள். ஆனால், இனிமேல் இந்துக்களின் முக்கிய கோரிக்கைகளான “ராம ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் பிரிவு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை தீர்க்க இந்துத்துவா தலைவர் ஒருவர் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.