Manipur President's Rule: மணிப்பூர் முதல்வராக இருந்த என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் முதல்வர் பதவியை என். பிரேன் சிங் ராஜினாமா செய்து மூன்று நாட்களுக்குப் பிறகும், புதிய முதல்வர் யார் என்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லாததால், அந்த மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 174(1) இன் கீழ், மாநில சட்டப்பேரவைக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஆனால், மணிப்பூரில் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 அன்று நடந்து முடிந்தது. இதனால் புதன்கிழமை வரை அடுத்த கூட்டத்திற்கான காலக்கெடு இருந்தது.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை தொடங்கவிருந்த பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் பல்லா ரத்து செய்தார் .

மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்பு, முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா! ஆளுநரைச் சந்தித்து கடிதத்தை வழங்கினார்!

Manipur | மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்! மத்திய அரசு அறிவிப்பு!

பிரேன் சிங் ராஜினாமா செய்தது ஏன்?

மே 2023 இல் மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அவரை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் போராடி வந்தன. இதனால் பெருகிவரும் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ராஜினாமா செய்தார்.

பிரேன் சிங்கின் ராஜினாமா முடிவுக்கு உச்ச நீதிமன்ற விசாரணையும் ஒரு காரணம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். "அதிகரித்து வரும் பொது அழுத்தம், உச்ச நீதிமன்ற விசாரணை மற்றும் காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவை முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமாவைக் கட்டாயப்படுத்தியுள்ளன" என்று அவர் கூறினார்.

பிரேன் சிங்கின் ராஜினாமா முடிவு நீண்ட கால தாமதமத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார். மக்களவையில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்கான திட்ட வரைபடம் பாஜகவிடம் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

பிரேன் சிங் மணிப்பூர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டி, வெளியான ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து சீல் வைக்கப்பட்ட உறையில் தடயவியல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரியது. அடுத்த சில நாட்களில் மணிப்பூர் முதல்வர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்தார்.

வன்முறையின்போது மெய்த்தீ குழுக்கள் மாநில அரசிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்ளையடிக்க அனுமதிக்கும்படி பிரேன் சிங் கூறியதாக ஆடியோவில் உரையாடல்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது.

இனக் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி அதிரடி