தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு ஏப்ரல் 8-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. ஆளுநர் மட்டுமின்றி 3 மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
இதனால், குடியரசுத் தலைவருக்கு எப்படி உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயிக்க முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்கும் நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் எப்படி இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு திரௌபதி முர்மு 14 கேள்விகள்:
1. பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன?
2. இந்த விருப்பங்களைப் பயன்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையால் கட்டுப்பட்டவரா?
3. பிரிவின் 200-ன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
4. 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு 361-வது பிரிவு முழுமையான தடையை விதிக்கிறதா?
5. அரசியலமைப்பு காலக்கெடு இல்லாத போதிலும், 200-வது பிரிவின் கீழ் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய காலக்கெடு மற்றும் நடைமுறைகளை நீதிமன்றங்கள் விதிக்க முடியுமா?
6. 201-வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
7. 201-வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாட்டிற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க முடியுமா?
8. ஆளுநரால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது ஜனாதிபதி 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
9. 200 மற்றும் 201-வது பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுத்த முடிவுகள், ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்குரியதா?
10. 142-வது பிரிவின் மூலம் ஜனாதிபதி அல்லது ஆளுநரால் பயன்படுத்தப்படும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்க அல்லது ரத்து செய்ய முடியுமா?
11. 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநிலச் சட்டம் நடைமுறைக்கு வருமா?
12. உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும், ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை முதலில் தீர்மானித்து, 145(3)-வது பிரிவின் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைக்க வேண்டுமா?
13. 142-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பாற்பட்டு, தற்போதுள்ள அரசியலமைப்பு அல்லது சட்ட விதிகளுக்கு முரணான உத்தரவுகளைப் பிறப்பிக்குமா?
14. 131-வது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதைத் தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான தகராறுகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பு அனுமதிக்கிறதா? இந்தக் கேள்விகளை எழுப்புவதன் மூலம், நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுப்படுத்த கோரியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் நீதித்துறை விளக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துயுள்ளார்.
