President Droupadi Murmu in Sabarimala | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலைக்கு வருகை தந்து தரிசனம் செய்தார். இருமுடி கட்டி பதினெட்டாம் படியேறி ஐயப்பன் தரிசனத்தை நிறைவு செய்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலைக்கு வருகை தந்து தரிசனம் செய்தார். இருமுடி கட்டி பதினெட்டாம் படியேறி ஐயப்பன் தரிசனத்தை நிறைவு செய்துள்ளார். பம்பைக்கு வந்து பம்பா நதியில் நீராடிய பிறகு, இருமுடி கட்டிக்கொண்டு காலை 11.30 மணியளவில் சந்நிதானத்திற்கு புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் சிறப்பு வாகனத்தில் மலை ஏறினார் குடியரசு தலைவர். நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்த குடியரசுத் தலைவர், இன்று காலை 7.30 மணியளவில் ராஜ்பவனில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். பின்னர் ஹெலிகாப்டரில் பத்தனம்திட்டா சென்றார்.

திட்டமிட்டதை விட முன்னதாகவே குடியரசுத் தலைவர் சபரிமலைக்குப் புறப்பட்டார். காலை ஒன்பது மணியளவில் கோன்னி பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டர் தரையிறங்கி, சாலை மார்க்கமாக பம்பைக்குச் சென்றார். பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் தேவஸ்வம் துறை அமைச்சர் வி.என். வாசவன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவல்துறையின் ஃபோர்ஸ் கூர்க்கா வாகனத்தில் சந்நிதானத்திற்கு சென்றடைந்தார். சந்நிதானம் வந்தடைந்த குடியரசுத் தலைவரை கொடிமரத்தின் அருகே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூரணகும்பம் அளித்து வரவேற்றார். தரிசனத்திற்குப் பிறகு, சந்நிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இரவில் திருவனந்தபுரம் திரும்புவார். அதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஹயாத் ரீஜென்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சபரிமலையில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.