நாடுமுழுவதும் ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வர இருக்கும், சரக்கு மற்றும் சேவை வரியின் 4 துணை மசோதாக்களுக்கு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

மத்திய ஜி.எஸ்.டி. மசோதா, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மசோதா, இழப்பீட்டு ஜி.எஸ்.டி. மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. மசோதா, ஆகியவற்றுக்கு பிரணாப் ஒப்புதல் வழங்கினார்.

ஜி.எஸ்.டி.

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

4 வகை வரி

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான பிரிவுகளில் வரி விதிக்கவும் ஜி.எஸ்.டி.கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுவரை ஜி.எஸ்.டி.வரியை செயல்படுத்துவதற்கான 4 வகையான துணை மசோதாக்கள் கடந்த மாதம் 29-ந்தேதி மக்களவையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்கள் அவையில் இந்த மசோதாக்கள் கடந்த 6-ந்தேதி நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.