Prayagraj Mahakumbh Stampede: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நடந்து 17 மணிநேரத்திற்கு பிறகு, உத்தர பிரதேச அரசு 30 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு:
இந்த சம்பவத்திற்குப் பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில் ஒரு நீதி விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும். மகா கும்பமேளா நெரிசல் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
"இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் என் இரங்கல். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
முதல்வர் யோகி மேலும் கூறியதாவது: இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். நேற்று மாலை 7 மணி முதல், புனித நீராடலுக்காக ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் கூடியிருந்தனர். அகாடா சாலையில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இதில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 30 பேர் உயிரிழந்தனர்."
இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
