பீகார் தேர்தலில் ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டு விலகுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போதைய தேர்தலில் ஜேடியு 84 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) சாதகமாக வந்துள்ள நிலையில், தேர்தல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் பேசிய பழைய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 2025 சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களுக்கு மேல் வென்றால், தான் அரசியலை விட்டே விலகுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார். அவரது இந்தப் பேச்சுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
2020 தேர்தலில் 43 இடங்களைப் பெற்ற ஜேடியு, 2025-ல் இன்னும் சுருங்கி 25-ஐ தாண்டாது என்று அவர் தீர்க்கமாகக் கூறினார். மேலும், நிதீஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக வரமாட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரஷாந்த் கிஷோரின் சபதம் தகர்ந்தது
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பிரசாந்த் கிஷோரின் இந்தச் சவால் தவிடுபொடியாகியுள்ளது. என்.டி.ஏ. கூட்டணி மொத்தமாக 208 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து அபார வெற்றியை உறுதிசெய்துள்ளது.
இதில், ஜேடியு 25 இடங்களைக் கடந்து 84 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இது 2020 தேர்தலில் பெற்ற இடங்களைவிட இரட்டிப்பாகும். பாஜக 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக வர இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிரஷாந்த் கிஷோர் தோல்வி
மறுபுறம், பிரசாந்த் கிஷோர் மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிய தனது அரசியல் கட்சியான 'ஜன் சுராஜ்' (Jan Suraaj) ஒரு இடத்தைக்கூட பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பிரஷாந்த் கிஷோரின் பிரச்சாரம், கல்வி, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் போன்ற முக்கியப் பிரச்சினைகளைப் பேசியபோதும், அது வாக்குகளாக மாறவில்லை.
தேர்தலில் வெற்றி பெற பல கட்சிகளுக்கு வழிகாட்டிய வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தனது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளார். தற்போது அவர் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பிரசாந்த் கிஷோர் தனது சபதத்தின்படி அரசியலை விட்டு விலகுவாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது பீகார் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
