ஐந்து மாநில தேர்தலை தள்ளி வைக்க பாஜக திட்டம்: பிரஷாந்த் பூஷன் குற்றச்சாட்டு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரசாரம் ஐந்து மாநிலங்களில் தேர்தலை தள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்
மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சட்ட மசோதாவை ஆளும் பாஜக தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைப்பதற்காகவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமல்படுத்த முடியாது. ஏனெனில் நமது அமைப்பில் பெரும்பான்மையை இழந்தால் ஆளும் அரசு கவிழ்ந்து விடும். அதன்பின்னர், புதிய அரசு அமையும்.” என்றார். இதுபோன்ற சமயங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழலுக்கு பதில் சொல்ல பாஜகவுக்கு வக்கில்ல: உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
“அதாவது ஜனநாயக முறையில் இருந்து ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறும் செயல் இது. எனவே இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் மீறும் செயலாகும். இது அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். மேலும், ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறுவதற்கு அரசியலமைப்பில் பல திருத்தங்கள் தேவை என்பதும் அவர்களுக்கும் தெரியும். அப்படி இருந்தும் இதனை செய்ய முயற்சிக்கிறார்கள்.” என்றும் பிரஷாந்த் பூஷன் கூறினார்.
மாநிலங்களவையில் தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும். ஆனாலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலத் தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு நாடு ஒரு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக அரசு தோல்வி பயத்தில் உள்ளது. அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக அச்சம் கொண்டுள்ளது. எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற பெயரில் இந்த ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைக்கப் போகிறார்கள். அதுவரை இந்த மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.” என்றார்