பணிபுரியும் பெண்களுக்கு 26 வார பேறுகால விடுப்பாக உயர்த்தி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இனி பெண்கள் பேறுகால விடுப்பாக இரு குழந்தைகள் பிறக்கும் வரை 6 மாதங்கள் வரை எடுக்கலாம்.

1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகப்பேறு உதவிச்சட்டம் பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி சட்டத்திருத்த மசோதா-2016’, கடந்த மார்ச் 9-ம் தேதி மக்களவையிலும், 20-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுதலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி இந்த மசோதாவுக்கு கடந்த திங்கட்கிழமை பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி 55 வருடங்களாக நடைமுறையில் இருந்த 12 வாரகால பிரசவ விடுமுறை தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 26 வாரகால விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை 50 ஊழியர்களுக்கு அதிகமாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், மகப்பேறு அடைந்திருக்கும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்கள் அருகே இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 முறையாவது, அந்த பெண் தனது குழந்தையைப் பார்த்து பாலூட்ட அனுமதிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தும் போது, எழுத்துப்பூர்வமாக மகப்பேறு விடுமுறை வசதி இங்கு இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், மகப்பேறு காலத்தில் வீட்டில் இருந்தே அந்த பெண் பணிபுரியும் வசதியையும் நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

இந்த 26 வார பேறுகால விடுப்பு என்பது முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும் தான். மூன்றாவதாக பிறக்கும் குழந்தையின்போது அந்த பெண்ணுக்கு மகப்பேறுவிடுப்பாக 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும். அதேசமயம், 3 மாதத்துக்கு குறைவான குழந்தையை ஒருபெண் தத்து எடுத்து வளர்க்கும் போது, அந்த பெண்ணுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பதில் கனடா (50 வாரங்கள்), நார்வே (44 வாரங்கள்) நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா (26 வாரங்கள்) பிடித்துள்ளது.