பாஜக மற்றும் ஆர்எஸ்எஸிடம் இருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவந்த பிரகாஷ் ராஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே உணவு ஆகியவற்றை கொண்டு நாட்டின் அரசியலமைப்பை சிதைத்து வருவதாக பிரகாஷ் ராஜ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் பதிவு

"#JustAsking" என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பாஜக அரசின் கொள்கைகள், சமூக பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், 'நீங்கள் உங்கள் நாட்டையும் உங்கள் குழந்தைகளையும் நேசித்தால் ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்து உங்கள் குழந்தைகள் காப்பாற்றுங்கள்' என்று பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்

அதாவது 'பாஜகவிடம் இருந்து உங்கள் மகளை காப்பாற்றுங்கள்; ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து உங்கள் மகனை காப்பாற்றுங்கள்' என்று இளைய தலைமுறையினரை குறிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை ஒருவர் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதை டேக் செய்து 'உங்கள் குழந்தைகளை பாஜக, ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்ற தொனியில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

பிரக்யா சிங் தாக்கூர் கூறிய சர்ர்சை கருத்து

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் சாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்யும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்பை பெற்றும் வரும் நிலையில், ''மாற்று மதத்தைச் சேர்ந்த ஆண்களை காதலிக்கும், திருமணம் செய்ய முடிவெடுக்கும் தங்கள் மகள்களின் கால்களை உடைப்பதற்கு இந்துப் பெண்களின் பெற்றோர்கள் தயங்கக் கூடாது'' என்று பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலான வாசகங்கள்

இது மட்டுமின்றி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சாதி, மதம் மறுப்பு திருமணங்களுக்கு எதிராக உள்ளதால் இதனை முன்வைத்தே 'பாஜகவிடம் இருந்து உங்கள் மகளை காப்பாற்றுங்கள்; ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து உங்கள் மகனை காப்பாற்றுங்கள்' என்ற வாசங்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.