பிரபாஸ் முதல் தேஜஸ் வரை; நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் பெயர்கள் மாற்றம்!!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
காடுகளில் இருந்து விலங்குகளை அதிக அளவில் பிடித்தல், வேட்டையாடுதல், விரிவான வாழ்விட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுத்தைகள் எண்ணிக்கை குறைந்து வந்தது.. 1952-ம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி, சீட்டா பிராஜக்ட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.. இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டது.. அவற்றை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்..
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தென்னாப்பிரிக்கா குடியரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.. அதன்படி,கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள் (7 ஆண், 5 பெண்கள்) இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து குவாலியருக்கும், பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்த போது சிறுத்தை வல்லுநர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவும் உடன் சென்றது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, செப்டம்பர் 25 அன்று தனது மன் கி பாத் நிகழ்ச்சியில், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்ப்பட்ட சிறுத்தைகளுக்கான பெயர்களை பரிந்துரைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.. அதன்படி, சிறுத்தைகளுக்கு பெயர்களை பரிந்துரை செய்ய இந்திய அரசின் mygov.in தளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 31, 2022 வரை ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுத்தைகளுக்குப் புதிய பெயர்களைப் பரிந்துரைத்து மொத்தம் 11,565 பரிந்துரைகள் பெறப்பட்டன. உள்ளீடுகள் ஒரு தேர்வுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார மதிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் முக்கியத்துவம் மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் நமீபியன் மற்றும் தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்கான சிறுத்தைகளுக்கு புதிய பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களின் பரிந்துரை பட்டியலில் இருந்து நமீபிய மற்றும் தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.. அதன்படி நமீபிய சிறுத்தைகளுக்கு ஆஷா, பவன், நபா, ஜுவாலா, கௌரவ், ஷௌரியா, டாத்ரி ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.. தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்கு தக்ஷா, நிர்வா, வாயு, அக்னி, காமினி, தேஜஸ், வீரா, சுராஜ், தீரா, உதய், பிரபாஸ், பாவக் ஆகிய பெயர்களும் வைக்கப்பட்டுள்ளது.. நமீபிய மற்றும் தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களை பரிந்துரைத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளது..