மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பையடுத்து, புதிய ரூபாயைப் பெற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், நோயாளிகளையும், முதியோர்களையும் நேரடியாக மருத்துவமனைகளில் சந்தித்து அவர்களிடம் ரூபாயை மாற்றி தபால்துறை பாராட்டும் விதத்தில் சேவை செய்து வருகிறது.

இதுவரை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் ரூ.25 லட்சம் மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி தபால்துறை தெரிவித்துள்ளது.

நோயாளிகளுக்காக...

இது குறித்து டெல்லி அஞ்சலகவட்டத்தின் தலைமை தபால்துறை அதிகாரி எல்.என். சர்மா கூறுகையில், “ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வங்கிகளுக்கு சென்று பணம் பெற முடியாது என்பதால், எங்கள் அலுவலகத்தின் பணியாளர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகள், அவர்களின் உறவினர்களிடமிருந்து செல்லாத ரூ.500, ரூ1000 பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்களை அளித்து வருகிறார்கள். 

ரூ.25 லட்சம்

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா, லேடி ஹார்டிங்கே, சப்தார்ஜங், குருதேக் பகதூர், ராணுவ மருத்துவமனை, தீனதயால் உபாத்யாயா மருத்துவமனைகளில் இதுவரை ரூ.25 லட்சத்தை மாற்றியுள்ளோம். இந்த நடவடிக்கை டிசம்பர் 30வரை தொடரும். மேலும், வெள்ளிக்கிழமை முதல் முதியோர் இல்லங்களுக்கும் ஊழியர்கள் சென்று, அவர்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய்களைப் பெற்று, புதிய ரூபாய்களை வழங்கி வருகிறார்கள்'' எனத் தெரிவித்தார். 



தபால்துறையின் இந்த சேவை நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், முதியோர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மகிழ்ச்சி
இது குறித்து கனிகாதாஸ்(32வயது) என்ற பெண் கூறுகையில்,“ என்னுடைய கணவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எனக்கு செலவுக்கு பணம் வேண்டும். ஆனால், அருகில் உள்ள வங்கிக்கு பலமுறை சென்று நான் என்னிடம் உள்ள பணத்தை மாற்ற முயன்றேன் முடியவில்லை. ஆனால், தபால்நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து என்னிடம் இருக்கும் செல்லாத ரூபாயை பெற்றுபுதிய ரூபாயை கொடுத்தது எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.