கேரள கன்னியாஸ்திரிக்கு உயரிய அருளாளர் பட்டம்…போப் பிரான்ஸிஸ் வழங்குகிறார்…

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த  புல்லுவழி கிராமத்தில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார்.

1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்ட ராணி 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். உதயநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களுக்காக பணியாற்றினார். இதனால் அப்பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது.

இதனால்  ஆத்திரமடைந்த அப்பகுதி செல்வந்தர்கள் ராணி மரியாவை கொலை செய்வதற்காக  சமந்தார் சிங் என்பவரை ஏற்பாடு செய்தனர். 1995-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி, இந்தூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்த கன்னியாஸ்திரி ராணி மரியாவை  54 முறை கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொலை செய்தான்.


இந்த கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்ற சமந்தார் சிங்கை, ராணி மரியாவின் குடும்பத்தினர் பலமுறை சிறையில் சந்தித்து மன்னிப்பு  வழங்கினர்.மேலும் அம்மாநில  கவர்னரையும் சந்தித்து சமந்தார் சிங்குக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

11 ஆண்டுகள் சிறையில் இருந்த சமந்தார்சிங், பின்னர் கிறிஸ்தவராக மாறி  கன்னியாஸ்திரி ராணி மரியாவின் வழியில் ஏழைகளுக்கு உதவி செய்வதில் தமது வாழ்நாட்களை செலவிட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி ராணி மரியாவை புனிதராக உயர்த்துவதற்கான பணிகளில் இந்தூர் மறை மாவட்டம்  ஈடுபட்டது. 2003 செப்டம்பர் 26-ந் தேதி வாடிகன் சிட்டி அவருக்கு இறையடியார் பட்டம் வழங்கியது.கிறிஸ்தவ மதிப்பீடுகள் அடிப்படையில் வீரத்துவ வாழ்வு வாழ்ந்ததற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் போப் பிரான்சிஸிடம் ஒப்படைக்கப்பட்டன.கன்னியாஸ்திரியின் மறைசாட்சிய வாழ்வை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர், அவருக்கு அருளாளர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார். இந்த ஆண்டு போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வரும்போது, கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு அருளாளர் பட்டம் வழங்குகிறார்.