Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை ..புதுச்சேரியில் பள்ளி திறப்பு..

புதுச்சேரியில் 20 மாதங்களுக்கு பிறகு ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாளுக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
 

Pondy School Reopen
Author
Puducherry, First Published Dec 6, 2021, 3:32 PM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மேள தாளங்கள் முழுக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி இன்முகத்துடன் வரவேற்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா  பரவல் குறைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. மேலும் நவம்பர் மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் நவம்பர் மாதத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கபடும் உத்தரவு தள்ளிவைக்கப்பட்டது. அதனையடுத்து சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் புதுச்சேரியில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல்  1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரை நேரமும் 9 முதல் 12 வகுப்பு மற்றும் கல்லூரிகள் முழுநேரமும் இயங்க உள்ளன.

இன்று பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க வாழை மர தோரணங்கள் கட்டி, மேள தாளங்களுடன் பள்ளிகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. மேலும் இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் வெப்பநிலை சோதிக்கப்பட்டு கிருமி நாசினி தரப்பட்டு வகுப்புக்கள் தொடங்கி உள்ளன. ஒரு சில பள்ளிகளில் முதல்முறையாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, மேள தாள் முழுக்கத்துடன் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால் பள்ளி மாணவர்களுக்கான பேருந்துமற்றும் மதிய உணவு திட்டம் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள் பேருந்தில் கூட்ட நெரிசலில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை காணப்பட்டது. எனவே விரைவில் அரசு இதுக்குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios