புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செம்மையாக செயல்பட தனி மாநில அந்தஸ்துதான் தீர்வு என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செம்மையாக செயல்பட தனி மாநில அந்தஸ்துதான் தீர்வு என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார். புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் 72-ஆம் ஆண்டு சட்டநாள் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் , பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், புதுவையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், ஆனால் அவற்றையெல்லாம் பல்வேறு காரணங்களால் நிரப்ப முடியவில்லை என்று கூறினார். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செம்மையாக செயல்பட தனி மாநில அந்தஸ்துதான் தீர்வு என்றும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கேட்டு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினோம், ஆனால் கடைசியில் பெட்ரோல் செலவுகள் ஆனது தான் மிச்சம் என்றும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். மேலும், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்தால் சிறந்த ஆட்சியை கொடுத்து மாநிலம் முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
