தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டா ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து மாணவர்களின் புரட்சி, புதுச்சேரியிலும் தொடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கு மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவித்து புதுவை மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், நேற்று இரவு புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் திடீரென திரண்டனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12 மணி நேரத்துக்கு மேலாக வாலிபர்கள் நடத்தும் இந்த போராட்டத்தில், பல்வேறு சமூகநல ஆர்வலர்களும் கலந்து கொண்டு, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தீவிர தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஏஎப்டி மைதானத்தில் தொடங்கிய அறப்போராட்டத்தை அறிந்ததும், இன்று காலை கல்லூரிகளுக்கு செல்லாமல் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் முக்கிய சந்திப்பான இந்திரா காந்தி சிலை அருகே பஸ்களில் இருந்து இறங்கி, ஏஎப்டி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அனைவரும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதபடி அணி திரண்டு வரிசையாக, சாலையோரத்தில் நடந்துசென்றனர்.

தமிழகத்தில் மாணவர்கள், வாலிபர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில், தங்கள் போராட்டம் தொடரும். ஜல்லிக்கட்டு நடத்தவும், பீட்டா அமைப்பை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கும் வரையில் புதுவை மாநிலத்திலும் போராட்டம் நீடிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர்,சமூக நல ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டும் ஈடுபட்டனர். பின்னர், கல்லூரி மாணவர்களுக்கு சம்மாக மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎப்டி மைதானம் அருகே எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் புதுச்சேரி காவல்துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.