Asianet News TamilAsianet News Tamil

மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயலும் அரசியல் கட்சிகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மொழியின் பெயரால் சில அரசியல் கட்சிகள் மக்களை பிரிக்க முயல்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்

Political parties try to divide people in the name of language blames pm modi speech in rozgar mela
Author
First Published Jun 13, 2023, 4:39 PM IST

மொழி என்பது முன்பு பிரித்தாள்வதற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது மொழியை வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக அரசு மாற்றியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மொழியின் பெயரால் சில அரசியல் கட்சிகள் மக்களை பிரிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.

தேசிய வேலைவாய்ப்பு மேளாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிலிருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், நிதிச்சேவைகள் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்ற உள்ளனர்.  இந்த வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வேலைவாய்ப்புத் திருவிழா என்பது இந்த அரசின் புதிய அடையாளமாக அமைந்துள்ளது என்றார். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில அரசுகளும் இது போன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.  தேச விடுதலையின் அமிர்த காலம் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், அரசுப் பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான தருணம் என்று பிரதமர் மோடி கூறினார். 

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் கூறினார். இந்தியா மற்றும் அதன் பொருளாதாரத்தின் மீது உலகம் மிகச் சிறந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலை, பெருந்தொற்றுப் போர் காரணமாக விநியோகத்தொடர் பாதிப்பு போன்றவற்றுக்கு இடையிலும்   இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியா அதிக நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வலிமை கொண்ட நாடாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

முன்பு நிர்வாகத்தில் முறைகேடுகளும், பொதுமக்களுக்கு சிக்கல்களும் அதிக அளவில் இருந்ததாகக் கூறிய அவர், இன்று உலகில் அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது என்றார். தற்போது இந்த அரசு உறுதியான முடிவுகளை எடுக்கும் அரசு என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசுத் திட்டங்களால்  மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நன்மைகள் குறித்து புதிதாக பணிக்குத்தேர்வு செய்யப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

அரசுத்துறை வேலைவாய்ப்பு நடைமுறைகளில் முன்பு, வாரிசு முறைகள், பரிந்துரைகள் மற்றும் பாரபட்சங்கள் இருந்தன என்றும் வேலைவாய்ப்புக்குப் பணம் தரவேண்டிய நிலையும் இருந்தது என்றும், இவை சில இடங்களில் பெரிய பிரச்சனையாக எழுந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். உணவகங்களில்  உணவுகளுக்கு விலைப் பட்டியல்  வைத்திருப்பதைப் போல, பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளுக்கு பல விதமான தொகை வசூலிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த ஒருவரது பதவிக்காலத்தின் போது, ரயில்வே வேலைவாய்ப்புக்கு நிலம் மோசடி தொடர்பான புகார்கள் எழுந்ததையும்  அவர் குறிப்பிட்டார். அது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருவதையும், அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதையும் தெரிவித்தார். வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் அதுபோன்ற கட்சிகள் தொடர்பாகவும், வேலைவாய்ப்புகளின் பெயரால் இளைஞர்களை மோசடி செய்வோர் குறித்தும் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

முந்தைய காலத்தில் வேலைவாய்ப்புகளுக்கு பணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்புகளுக்குப் பணம் வசூலிக்கப்படுவதில் அமைந்துள்ளதா அல்லது அவர்களை அதிலிருந்து பாதுகாத்து நியாயமான நடைமுறைகளை வகுப்பதில் அமைந்துள்ளதா என்பதை இப்போது தேசம் முடிவு செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.

வலுவிழந்தது பிபர்ஜாய் புயல்: மக்களை வெளியேற்றும் பணி குஜராத்தில் தீவிரம்!

சில அரசியல் கட்சிகள் மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயல்வதாக கூறிய அவர், தற்போதைய மத்திய அரசு மொழியை வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் தாய் மொழியில் நடத்தப்படுவது இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக அவர் கூறினார்.

தற்போதைய இந்தியாவில்  அரசு அமைப்புகளும், அரசு ஊழியர்கள் பணிபுரியும் முறையும் வேகமாக மாறிவருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டின் சாதாரண மக்கள் முன்பு அரசு  அலுவலகங்களுக்குச் சென்றபோது அவர்கள்,  சிக்கலான அனுபவங்களை சந்தித்ததைப் பிரதமர் நினைவூட்டினார். ஆனால் தற்போது மக்களுக்கான  சேவைகளை அரசு அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு வீட்டையும் அரசு சென்றடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் டிஜிட்டல் சேவைகள் பெறுவதை  மொபைல் செயலிகள் எளிதாக்கியிருப்பதாகவும்,  மக்கள் குறைதீர்க்கும் அமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இன்று பணிநியமன ஆணை பெற்றுள்ளவர்கள்  நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் இந்த சீர்திருத்தங்களை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios