Asianet News TamilAsianet News Tamil

வலுவிழந்தது பிபர்ஜாய் புயல்: மக்களை வெளியேற்றும் பணி குஜராத்தில் தீவிரம்!

பிபர்ஜாய் புயல் வலுவிழந்ததற்கிடையே குஜராத் மாநிலத்தில் மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

Cyclone Biparjoy weakens but continues march Evacuation begins
Author
First Published Jun 13, 2023, 1:05 PM IST

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான  காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிபர்ஜாய் புயலானது மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறும் என்றும், தென்மேற்கு பருவமழை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் நேற்று மையம் கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்த புயல், வருகிற 14ஆம் தேதி வரை தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் என்றும், வருகிற 15ஆம் தேதி பிற்பகலில் குஜராத் மாநிலம் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிபர்ஜாய் புயல் அதி தீவிர புயலில் இருந்து மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. ஆனாலும், குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் கடற்கரையில் அது நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிபர்ஜாய் புயல் ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, சவுராஷ்டிரா - கட்ச் பகுதிகளுக்கிடையே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 15ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாலையில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் தற்போதைய  தகவலின்படி, போர்பந்தருக்கு தென்மேற்கே 290 கிமீ தொலைவிலும், ஜக்காவ் துறைமுகத்திலிருந்து 360 கிமீ தென்மேற்கே வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், குஜராத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் 15ஆம் தேதியன்று, கட்ச், தேவபூமி துவாரகா மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வானியல் அலைக்கு மேல் சுமார் 2-3 மீட்டர் உயரத்தில் புயல் எழும்பினால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும். நாளை மாலை வரை கடல் நிலை கொந்தளிப்பாகவும், அதன்பிறகு 15ஆம் தேதி மதியம் வரை மிகக் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் கணிக்கபப்ட்டுள்ளது.

புயல் காரணமாக குஜராத்தின் கட்ச்-சவுராஷ்டிரா மாவட்டங்களில் கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 7,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் குஜராத் கடற்கரையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக, பிபர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிபார்ஜாய் புயலின் பாதிப்பைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அப்போது பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போது பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

குஜராத் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பிபோர்ஜாய் புயல் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புயல் தொடர்பாக தன்னிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலை குறித்து கேட்டறிந்ததாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் எனவும் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பை உறுதி செய்யவும், சேதம் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக மீட்டெடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகளின் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டு அறைகளின் 24x7 செயல்பாட்டை உறுதிசெய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குஜராத் நிவாரண ஆணையர் அலோக் பாண்டே கூறுகையில், “இன்று முதல் இரண்டு கட்டங்களாக பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கரையிலிருந்து 0 முதல் 5 கிமீ தொலைவில் வசிக்கும் மக்கள் முதலில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். அதன்பின், கரையோரத்தில் இருந்து 5 முதல் 10 கி.மீ., தொலைவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

“3,000 பேர், குறிப்பாக துறைமுகத்தில் பணிபுரியும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள், காண்ட்லாவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். கடலுக்கு அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மாண்ட்விக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடற்கரையிலிருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் சுமார் 23,000 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று முதல் பாதுகாப்பான தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்படுவர்.” என கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு ரயில்வே 67 ரயில்களை ரத்து செய்துள்ளது. 43 ரயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தவிர, ஜூன் 16ஆம் தேதி தென்மேற்கு ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் நுழைய வாய்ப்புள்ளதால், வடமேற்கு ரயில்வே சில ரயில் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios