நிதிஷ் குமார் சுயநலவாதி- ராகுல் தாக்கு

காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிஸ், ஐக்கிய ஜனதா தளம் அமைத்த மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக என்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார். சமூகவிரோத சக்திகளுடன் தனது சொந்த அரசியலுக்காக நிதிஷ் குமார் கைகோர்த்துள்ளார். யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே நிதிஷ் சேர்ந்துவிட்டார். இதுதான் இந்திய அரசியலில் உள்ள பிரச்சினை. 

மக்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை அரசியலில் தெரிந்து கொள்ளலாம். நிதிஷ் குமாரின் திட்டத்தை நான் அறிந்து கொண்டேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவுடன் சேர அவர் திட்டமிட்டு இருந்தார். சிலர் தங்களின் சுயலாபத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். கொள்கை, நம்பிக்கை, எதுவும் அவர்களுக்கு கிடையாது. அதிகாரப் பசிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்’’ எனத் தெரிவித்தார். 

இமாச்சலப்பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங் கூறுகையில், “இந்த விசயத்தில்நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. எனினும், நிதிஷ் குமார் அடிக்கடி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்வது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தராது’’ என்றார். மிகவும் அதிர்ச்சி அடைகிறோம்- இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், “ பா.ஜனதாவுடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருப்பது துரதிருஷ்டவசமானது. எதிர்மறையான வளர்ச்சி. இந்த முடிவைக் கேட்டதும் நாங்கள் மிகவும்  அதிர்ச்சி அடைந்தோம். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமாக இருந்ததையும் அறிவோம். 

ஊழல் இல்லாத அரசை நிதிஷ் குமார் வழங்குவார் என நம்புகிறோம்.  அதை புரிந்து கொள்கிறோம். அதற்காக துணை முதல்வர் தேஜஸ்வி மீது அரசியல் உள்நோக்கத்துடன் பாஜனதா அரசு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதை உறுதியான ஊழல் வழக்கு என நிதிஷ் குமார் எடுக்கத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு அறிவிக்கும் வரை நிதிஷ் குமார் பொறுமையாக இருந்திருக்கலாம். ஆனால் மக்கள் மதச்சார்பற்ற சக்திகள் பின்னால்தான் இருப்பார்கள் என்பதை நம்புகிறோம்’’ என்றார்.