police protection to sasikala pushpa MP

தொடர் அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு 24 மணி நேரமும் முழு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா எம்.பி.. இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக மாநிலங்களவையில் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இதனால் தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன், அவரது பாதுகாப்புக்கு ஒரு காவலரும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுதோஷ் குமார், ‘சசிகலா புஷ்பா எம்.பி.க்கு வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

சசிகலா புஷ்பா எம்.பி., நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அவருக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் அந்தந்த மாநிலத்தின் போலீஸ் காவல் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.