தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்ததால் போலீசாரை ஏவி மாணவனை கம்பியில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உயர் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படிக்கும் 10 ம் வகுப்பு மாணவன் ஒருவன் கடந்த ஜூலை மாதம் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் ஒருவரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் கல்வி அதிகாரிக்கு அனுப்பியுள்ளான்.  

இதனால் அந்த ஆசிரியர் ராமுலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து ஆத்திரமடைந்து ஆசிரியர் போலீசார் மூலம் அந்த மாணவனை எச்சரிக்க கூறியுள்ளார்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீசார் மாணவனை இழுத்து சென்று வாலிபால் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

ஆனால் போலீசார் சிறுவனைத் தாக்கவில்லை என மறுப்பு தெரிவித்தனர். மேலும் அந்த மாணவன்  பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாகவும், அதை பார்த்ததால் அவனை பிடித்ததாகவும் கூறினர்.

இதுகுறித்து  விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு  ரீமா ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மாணவனை தக்கிய போலீசார் மீது இலாக்காபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.