Asianet News TamilAsianet News Tamil

#Breaking: முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை.. ஊரடங்கு கட்டுபாடு குறித்து முக்கிய முடிவு ..?

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
 

PM Speaking at meeting with the Chief Ministers.
Author
India, First Published Jan 13, 2022, 6:28 PM IST

நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் சுனாமி போல் வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 1.9 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இன்று பாதிப்பு 27% என அது உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து, கொரோனா சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கை 11,17,531 என்று உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு உறுதிபடுத்தவும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கான தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து வியாழக்கிழமை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியானது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளின் நிலை குறித்தும் பிரதமர் கலந்தாலோசிப்பார் என்றும் அதனுடன், சிறார்களுக்கு தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் உள்ளிட்ட தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் தலைமையிலான அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முழு முயற்சியுடன் எடுக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுக்கும் போரில் சுகாதாரத்துறை, காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள்,மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக இந்தியாவில் டிசம்பர் 30ம் தேதி 1.1% ஆக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 11.5% ஆக அதிகரித்துள்ளது. 300 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கவலைக்குரிய மாநிலங்களாக மாறி வருகின்றன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios