வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிகளை ஆய்வு செய்ய நாளை கேரளா செல்லும் பிரதமர் மோடி - முழு விவரம்!
PM Modi : வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அங்கு நடக்கும் நிவாரண பணிகளை ஆய்வு செய்ய கேரளா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை, கேரளாவின் வயநாடு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 380க்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிலரது நிலை என்ன ஆனது என்பது குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்து வருகின்றார்.
கேரளாவின் இந்த பெரும் சோகத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக அரசும், தமிழ் திரை துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளும் பெரிய அளவிலான நிவாரண தொகையினை தொடர்ச்சியாக கேரளா அரசுக்கு அனுப்பி வருகின்றனர். அதேபோல பிற மொழி நடிகர், நடிகைகளும் நிவாரண நிதிகளை கேரளாவிற்கு தொடர்ச்சியாக அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி வயநாடுக்கு சென்று அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட உள்ளார். தற்பொழுது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி நாளை காலை 11 மணியளவில் கண்ணூர் சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு 12.15 மணி அளவில் வயநாட்டிற்கு செல்லும் நரேந்திர மோடி, அங்கு மீட்பு பணியில் இருக்கும் குழுவினரிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அதனை தொடர்ந்து பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் கலந்தாய்வில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வயநாடு நிலச்சரிவு குறித்து முழு விவரங்களையும் கேட்டறிவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வயநாடு பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ஏற்கனவே மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிலத்தடியில் இருந்து வந்த மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள்