அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய 3 இடங்களுக்கும் சென்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டில் முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி நேராக சென்று சந்தித்தது, அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் உதவியாக இருந்ததுடன், பிரதமர் மோடியுடனான சந்திப்பு விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியும் அளித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வளர்ச்சி பெருமையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தடுப்பூசி வளர்ச்சியில் இந்திய விஞ்ஞானத்தின் சிறந்த கொள்கைகளை எவ்வாறு பின்பற்றுகிறது என்பது குறித்து பேசிய பிரதமர் மோடி,  அதேவேளையில் தடுப்பூசி விநியோக செயல்முறையை சிறப்பாக செய்வதற்கான பரிந்துரைகளையும் கேட்டார்.

ஆரோக்கியத்தை கடந்து, கொரோனா தடுப்பூசிகளை உலகளாவிய நன்மையாகவும் இந்தியா கருதுவதாகவும், மற்ற நாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.  அதன் ஒழுங்குமுறை செயல்முறையை நாடு எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து விஞ்ஞானிகள் தங்களது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். கொரோனாவை சிறப்பாக எதிர்த்துப் போராடுவதற்காக பல்வேறு புதிய மற்றும் மறுபயன்பாட்டு மருந்துகளையும் அவர்கள் எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதற்கான கண்ணோட்டத்தையும் விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பார்க்கிற்கு சென்ற பிரதமர் மோடி, “அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பார்க் விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்காக, இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த அணியையும் நான் பாராட்டுகிறேன். இந்த பயணத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு அவர்களுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கிற்கு பயணத்தை மேற்கொண்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, “ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் விஞ்ஞானிகளின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த சோதனைகளில் இதுவரை விஞ்ஞானிகள் இந்தளவிற்கு முன்னேறியதற்கு வாழ்த்துக்கள். இதில் மேலும் விரைவான முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யவும் விரைவுபடுத்தவும், அவர்களின் குழு ஐ.சி.எம்.ஆருடன் நெருக்கமாக செயல்படுகிறது” என்றார்.

சீரம் நிறுவனத்தைப் பார்வையிட்ட பிறகு அதுகுறித்து டுவீட் செய்த பிரதமர் மோடி, “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை மேலும் அதிகரிக்க அவர்கள் எவ்வாறு திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த மற்றும் தடுப்பு மருந்து முன்னேற்றம் குறித்த விவரங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர்” என்று பிரதமர் மோடி டுவீட் செய்திருந்தார்.