இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு பிரதமர் மோடி, என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. அதன் சார்பாக, சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் ஆளுங்கட்சியை விமர்சித்து பேசியதால், பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாள்தோறும் மத்திய பிரதேச அரசியலில் பரப்பிற்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் சவுகான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
 
அதில் பேசிய அவர், ராகுல் எங்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை வரவேற்கிறேன். வேண்டுமானால் அவர் வரும் தேர்தல் வரைக்கும் இங்கேயே தங்கட்டும். காங்கிரஸ் கட்சியில் ராஜாக்களும் தொழிலதிபர்களும் பதவி போர் நடத்துகிறார்கள். அந்தக் கட்சிக்கு மக்களை பற்றியோ அவர்களின் பிரச்சனைகள் பற்றியோ புரிதல் இல்லை. ஊழல் புகார்களுக்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சி, மக்கள் நலன் பற்றியும், பாஜக நிர்வாகம் பற்றியும் வீண் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி நடத்தியபோது, மக்களை தங்கள் அரசின் பிரஜைகள் என்று மட்டும்தான் நினைத்தார்கள். ஆனால் நான் மக்களை எனது உடன்பிறப்புகளாக நினைக்கிறேன். மேலும் அவர்களுக்கு நான் நெருங்கிய உறவினராக இருக்கிறேன்” என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் மோடி பற்றியும் சிவராஜ் சிங் சவுகான் இந்த பேட்டியில் பெருமிதமாக பேசியுள்ளார். அதன்படி, " பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு. அவரைப்போல நாட்டுமக்களின் நலனில் அக்கறை கொள்ளும் தலைவரை நான் இதுவரை பார்க்கவில்லை, என்று சவுகான் குறிப்பிட்டுள்ளார்.