இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவு போதாத நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்தும், ஆக்ஸிஜன் உற்பத்திய அதிகரித்து, அவற்றை மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப விநியோகம் செய்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் நாளை(ஏப்ரல் 23) ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அதுதொடர்பான ஆலோசனைகளை நடத்துவதிலும் பிரதமர் பிசியாக இருக்கிறார்.

எனவே மேற்குவங்கத்தில், தான் கலந்துகொள்ளவிருந்த பிரச்சாரக்கூட்டத்தை ரத்து செய்துள்ளார் பிரதமர் மோடி. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில், 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. 7 மற்றும் 8ம் கட்ட வாக்குப்பதிவுகள் நடக்கவுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை நடக்கும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வதாக இருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்திவருவதால், மேற்குவங்க பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.