மக்கள் இதயங்களை வென்ற பிரதமர் மோடி: 95 வயது நிர்வாகிக்கு அங்கீகாரம்!
பாஜகவை சேர்ந்த 95 வயது நிர்வாகியை பிரதமர் மோடி அங்கீகரித்தது அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாறிமாறி ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 95 வயது நிர்வாகியை பிரதமர் மோடி அங்கீகரித்தது அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தியோகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பொது பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய 95 வயதான தரம் சந்த் தேராசாரியாவை அடையாளம் கண்ட பிரதமர் மோடி, அவரை அங்கீகரித்தார். பிரதமர் மோடியின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மனிதர்களின் பணிச்சுமையை குறைக்கும் செயற்கை நுண்ணறிவு: பில் கேட்ஸ்!
முன்னதாக, பிரதமர் மோடியை அபசகுனம், பிக்பாக்கெட்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக்குவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
“சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் ஒரே ஒரு முறை காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக குரல் எழுப்பினார். அதுவும் காங்கிரஸின் முன்னேற்றத்திற்காக, ஆனால் கட்சி இன்றுவரை சச்சின் பைலட்டைத் தண்டித்து வருகிறது. ராஜேஷ் பைலட் இப்போது இல்லை, ஆனால் காங்கிரஸ் கட்சி அவரது மகன் சச்சின் பைலட் மீது வெறுப்பு உணர்வுடன் உள்ளது.” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் வரலாறு தெரியாமல் பேசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். குஜ்ஜார் சமூக வாக்குகளை தூண்டுவதற்காக அவர் இவ்வாறு பேசுவதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.