நாட்டின் 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர்-மும்பை இடையே இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நாட்டின் 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர்-மும்பை இடையே இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தையும், ரூ.7200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். 2வது நாளான இன்று நாட்டின் 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காலை 10.30மணிக்கு தொடங்கி வைத்தார். காந்தி நகர் முதல் மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரயிலை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, காந்திநகர் முதல் அகமதாபாத்தில் உள்ள கலுப்பூர் ரயில் நிலையம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். இவருடன் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் இந்தப் பயணத்தில் பிரதமருடன் கலந்து கொண்டனர்.
கலுப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பிரதமர் மோடி, அங்கு அகமதாபாத் மெட்ரோ ரயிலின் முதல்கட்டத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஏறக்குறைய ரூ.12,925 கோடி மதிப்பில் மெட்ரோ திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

கலுப்பூர் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பிரதமர் மோடி தால்தேஜில் உள்ள தூர்தரஷ்ன் மையத்தை அடைகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
அதன்பின் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகருக்குச் செல்லும் மோடி ரூ.7200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் பாஜக கட்சி ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால் தான் பிரதமர் மோடி அடிக்கடி குஜராத் சென்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், தொடங்கி வைக்கிறார்.
