பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்லவுள்ளார்

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் (சுவாமி நாராயண் கோயில்) கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் கோயில் கட்டுமானப் பணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி பராமரித்து வரும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா (பிஏபிஎஸ்) அமைப்பு, அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தங்களது வழிபாட்டுக்காக அங்கு இந்து கோயில் கட்டப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் முன்வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, கோயில் கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக அளித்தார்.

Scroll to load tweet…

இந்தக் கோயிலை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் (13,14 ஆகிய தேதிகள்) பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்லவுள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் அபு தாபி சென்றடையவுள்ளார். தொடர்ந்து, மாலை 4 மணி வரை இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அவர், அஹ்லான் மோடி எனும் சமூக நிகழ்வில் மாலை 6.30 மணிக்கு பங்கேற்கிறார். பிரதமர் மோடி, தனது இரண்டு நாட்கள் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, சந்தித்துப் பேசவுள்ளார்.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்: இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவு- கல்வி முதல் வர்த்தகம் வரை!

அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயணன் கோயில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப் பெரிய இந்து மத வழிபாட்டு தலமாக உருவெடுக்கவுள்ளது. இந்தக் கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது