Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம்!

பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த பயணத்தின் போது, அம்மாநிலத்தில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்

PM Modi to visit Maharashtra tomorrow to inaugurate multiple development projects smp
Author
First Published Jan 11, 2024, 3:08 PM IST

பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி (நாளை) மகாராஷ்டிரா செல்கிறார். மதியம் 12.15 மணியளவில் நாசிக் செல்லும் பிரதமர், அங்கு 27ஆவது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், மும்பையில், அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார். மாலை 4.15 மணியளவில் நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, முடிவடைந்த திட்டங்களைத். தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்


நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மக்களின் 'போக்குவரத்தை எளிதாக்குவது' பிரதமரின் தொலை நோக்குப் பார்வையாகும். இதற்கேற்ப, 'அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலம் (துறைமுகங்களை இணைக்கும் பாலம்) கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட பிள்ளையார் கோயில்: இதுதான் காரணம்!

நவி மும்பை பொது நிகழ்ச்சி


நவி மும்பையில் ரூ.12,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, முடிவடைந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

கிழக்கு ஃப்ரீவேயின் ஆரஞ்சு கேட் முதல் மரைன் டிரைவ் வரை சுரங்கப் பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 9.2 கி.மீ சுரங்கப்பாதை ரூ 8700 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இது மும்பையில் ஒரு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டமாக  இருக்கும். இது ஆரஞ்சு கேட் மற்றும் மரைன் டிரைவ் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும்.

சூர்ய பிராந்திய மொத்த குடிநீர் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். ரூ.1975 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் தானே மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும். இதனால் சுமார் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். நெருல் / பெலாப்பூர் முதல் கார்கோபர் வரை இயங்கும் புறநகர் சேவைகள் இப்போது உரான் வரை நீட்டிக்கப்படுவதால் நவி மும்பைக்கான இணைப்பை இது மேம்படுத்தும். 'உரான் -கார்கோபர் ரயில் பாதை கட்டம் 2' அர்ப்பணிப்பு இதில் அடங்கும். உரான் ரயில் நிலையத்திலிருந்து கார்கோபர் வரையிலான மின்சார ரயிலின் தொடக்க ஓட்டத்தையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

தானே-வாஷி / பன்வெல் டிரான்ஸ்-ஹார்பர் பாதையில் ஒரு புதிய புறநகர் ரயில் நிலையம், 'திகா கோன்' மற்றும் கர் சாலை மற்றும் கோரேகான் ரயில் நிலையத்திற்கு இடையிலான புதிய 6 வது பாதை ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் மும்பையில் உள்ள ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளுக்கு பயனளிக்கும்.

சாண்டாக்ரூஸ் மின்னணு ஏற்றுமதி செயலாக்க மண்டலம் - சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கான 'பாரத் ரத்னம்' எனும் மெகா பொது வசதி மையத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் உட்பட, இத்துறைக்கான பணியாளர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி அமைக்கப்பட உள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரண வர்த்தகத்தில் ஏற்றுமதித் துறையை மாற்றியமைப்பதுடன், உள்நாட்டு உற்பத்திக்கும் இந்த மெகா மையம் உதவும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் புதிய நிறுவனங்கள் மற்றும் சேவைகள் கோபுரம் (நெஸ்ட்)-01-ஐயும் பிரதமர் திறந்து வைக்கிறார். நெஸ்ட் - 01 பிரதானமாக ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை அலகுகளுக்கானது. இது தற்போதுள்ள நிலையான வடிவமைப்பு தொழிற்சாலை - I லிருந்து இடமாற்றம் செய்யப்படும். புதிய கோபுரம் பெரிய அளவிலான உற்பத்திக்காகவும், தொழில்துறையின் தேவைக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது, நமோ மகளிர் அதிகாரமளித்தல் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான வெளிப்பாடு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் இந்தத் திட்டம் மேற்கொள்ளும்.

27 ஆவது தேசிய இளைஞர் விழா


நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களை ஒரு முக்கிய அங்கமாக மாற்றுவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த முயற்சியின் மற்றொரு நடவடிக்கையாக, நாசிக்கில் 27ஆவது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 முதல் 16 வரை தேசிய இளைஞர் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் திருவிழாவை மகாராஷ்டிரா மாநிலம் நடத்துகிறது. இந்த ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் Bharat@ 2047: இளைஞர்களுக்காக இளைஞர்களால் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில் ஐக்கிய தேசத்திற்கான அடித்தளங்களை வலுப்படுத்தவும் ஒருங்கிணைப்பை உருவாக்கவும் தேசிய இளைஞர் விழா முயற்சிக்கிறது. நாசிக் திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 7500 இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற விளையாட்டுகள், சொற்பொழிவு மற்றும் கருப்பொருள் அடிப்படையிலான விளக்கக்காட்சி, இளம் கலைஞர்கள் முகாம், சுவரொட்டி தயாரித்தல், கதை எழுதுதல், இளைஞர் மாநாடு, உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios