பிரதமர் மோடி நாளை டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II திட்டங்களைத் திறந்து வைக்கிறார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, டெல்லி-NCR இணைப்பை மேம்படுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.11,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட துவாரகா விரைவுச்சாலை (டெல்லி பிரிவு) மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) ஆகியவை டெல்லி மற்றும் NCR இணைப்பை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, டெல்லியின் உள் மற்றும் வெளிவட்டச் சாலைகளில் அழுத்தத்தைக் குறைக்கும்.
துவாரகா விரைவுச்சாலை
10.1 கி.மீ நீளமுள்ள துவாரகா விரைவுச்சாலையின் டெல்லிப் பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் 5.9 கி.மீ சிவன் சிலையிலிருந்து துவாரகா செக்டர்-21 வரையிலும், 4.2 கி.மீ துவாரகா செக்டர்-21ல் இருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரையிலும் அமைந்துள்ளது. இந்த விரைவுச்சாலை யஷோபூமி, மெட்ரோ நீல மற்றும் ஆரஞ்சு வழித்தடங்கள் (DMRC Blue & Orange Line), வரவிருக்கும் பிஜ்வாசன் ரயில் நிலையம் மற்றும் துவாரகா கிளஸ்டர் பேருந்து நிலையத்திற்கு பல்வகை இணைப்பை வழங்கும்.
UER-II திட்டம்
இரண்டாவது பெரிய திட்டமான நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II)ன் அலிப்பூரிலிருந்து திச்சோன் கலான் வரையிலான பகுதி பஹதூர்ஹார் மற்றும் சோனிபட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.5,580 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்தத் திட்டம் டெல்லியின் நெரிசலான இடங்களான முகர்பா சௌக், தௌலா குவான் மற்றும் NH-09ல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டம் சரக்குப் போக்குவரத்தை (Goods Movement) விரைவுபடுத்தி, டெல்லி-NCRன் தொழில்துறை இணைப்பை மேம்படுத்தும்.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டம்
இந்தத் திட்டங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்யும். தலைநகரில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரமும், தொழில்துறை வளர்ச்சிக்கும் உத்வேகம் கிடைக்கும்.
