Asianet News TamilAsianet News Tamil

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிரசாரம்!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளார்

PM Modi to campaign poll bound madhya pradesh and rajasthan smp
Author
First Published Sep 25, 2023, 11:48 AM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணி உருவான பின்னர் இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும்  என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் நட்சத்திர பிரசாரகர் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்யவுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத் யாத்திரையையும், ராஜஸ்தான் மாநிலத்தில் பரிவர்தன் யாத்திரையையும் பாஜக அண்மையில் நிறைவு செய்த நிலையில், பிரதமர் மோடியின் பயணம் அக்கட்சிக்கு ஊக்கமளிக்கும் என தெரிகிறது.

ஜனசங்கத்தின் இணை நிறுவனர் தீன் தயாள் உபாத்யாயின் பிறந்தநாள் என்பதால், இன்று பாஜகவுக்கு முக்கியமான நாள். இந்த நாளில் இரு மாநிலங்களிலும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி, அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ளார்.

அக்டோபரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதிகள் எதிர்பார்க்கப்படுவதற்கிடையே, சுவாரஸ்யமாக, இந்த முறை பாஜக தனது பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி வரும் வாரங்களில, குறைந்தது மூன்று முறையாவது மத்தியப் பிரதேசத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் பாஜக ஆரம்பகட்ட தேர்தல் நடைமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் ஏற்கனவே தொடங்கி விட்டது.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணி போபாலின் ஜம்பூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று பாஜக எதிர்பார்க்கிறது. பிரதமர் மோடி மத்தியப்பிரதேச வருகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்.. அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா?

மத்தியப் பிரதேசத்துக்கு, 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 33 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரது 34ஆவது பயணமாகும். இந்த ஆண்டு மட்டும் ஏழாவது முறையாக அவர் அங்கு செல்லவுள்ளார். ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும், காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடவும் தயங்கியதில்லை. 

அதேபோல், தேர்தல் வரவுள்ள மற்றொரு மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு பிரதமர் மோடி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் செல்லவுள்ளார். மதியம் 2 மணியளவில் ஜெய்ப்பூரை அடையும் அவர், தீன் தயாள் உபாத்யாவுக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். முன்னதாக, உதய்பூர்-ஜெய்பூர் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios