இன்றிரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, அவரது உரையின் பொருள் குறித்து பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூர்:
பிரதமரின் உரை, சமீபத்திய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் பற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய ராணுவத்தின் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த ஒப்பந்தம் பற்றிப் பேசக்கூடும் என்று கூறப்படுகிறது. இது பிரதமரின் உரையின் முக்கிய மையமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்:
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் உள்ளிடவை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ அதிகாரிகள் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்நிலையில் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் பதில் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடியின் இதுவரை பொதுவெளியில் பேசவில்லை. இந்நிலையில் இந்த முதல் உரை அனைவராலும் உற்றுநோக்கப்படுவதாக இருக்கும். இந்த உரை முக்கிய செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
