Asianet News TamilAsianet News Tamil

இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

PM Modi thanks to all members for their support to pass women reservation bill in loksabha smp
Author
First Published Sep 21, 2023, 7:24 PM IST

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும், அரசியலமைப்பின் 128ஆவது திருத்த மசோதா, 2023 - மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு நாரி சக்தி வந்தன் அதினியம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அமல்படுத்திய பிறகே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலுக்கு வரும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா  மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இறுதியில், மசோதாவுக்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. அங்கும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தல்!

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் அரசியலமைப்பின் 128வது திருத்த மசோதா, 2023க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில்  பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் அவையில் எழுந்து பேசிய பிரதமர், 'இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்' என்று  நேற்றைய தினத்தைக் குறிப்பிட்டார். இந்த சாதனைக்கு அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும், அவற்றின் தலைவர்களையும் அவர் பாராட்டினார். நேற்றைய முடிவும், மாநிலங்களவையில் எடுக்கப்பட இருக்கும் முடிவும், பெண்சக்தியின் மனநிலையை மாற்றும் என்றும், அது உருவாக்கும் நம்பிக்கை நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

அதேபோல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா  மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெறும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மாநிலங்களவையில் மகளிர் துணைத் தலைவர்களைக் கொண்ட குழுவை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் அமைத்துள்ளார். இக்குழுவில், பிடி உஷா, அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், திமுக எம்.பி., கனிமொழி என்விஎன் சோமு உள்பட 13 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios