பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று நான் பார்த்ததில்லை என்று வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதால், சமூக ஊடங்களில் மோடியைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தேன், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றேன் என்று உருக்கமாகப் பேசுவது வாடிக்கை. 2014 தேர்தல் சமயத்தில் நரேந்திர மோடி டீ விற்பனை செய்தவர், இன்று இவ்வளவு உயரத்துக்கு வந்துள்ளார் என பாஜகவினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர். அந்தப் பிரச்சார உத்தி பாஜகவுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது. இருப்பினும் அவர் உண்மையில் டீ விற்றாரா இல்லையா என்ற கேள்வி எப்போதும் எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்படுவதும் தொடர்கிறது. 

இந்நிலையில் வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று பேசிய பேச்சு சமூக ஊடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், “பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது. நான் அவருக்கு 43 ஆண்டுகால நண்பர். மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கே மோடி அப்படி கூறினார்” என்று கொளுத்திப்போட்டார்.  

பிரவீன் தொகாடியாவின் கருத்து வெளியானதுமே சமூக ஊடங்கள் களைக்கட்டத் தொடங்கின. மோடி எதிர்ப்பாளர்கள், ‘அப்போ இதுவும் பொய்யா’ என்று கேள்வியை எழுப்பி மோடியைக் கலாய்த்துவருகிறார்கள். சமூக ஊடகங்களில் இதை பலரும் கேள்வி குறிப்பிட்டு மோடியைக் கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

இதற்கு பதிலடி தர பாஜகவினரும் அதை மறுத்து வருகிறார்கள். பிரவீன் தொகாடியாவையும் விமர்சனம் செய்துவருகிறார்கள். பிரவீன் தொகாடியாகவுக்கும் மோடிக்கும் அண்மைகாலமாக உறவு சீராக இல்லை.  பிரதமர் மோடியை தொகாடியா அடிக்கடி விமர்சனம் செய்துவருகிறார். அதன் வெளிப்பாடகவே பிரவீன் தொகாடியா மோடி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தின் மீது கல்லெறிவதாக பாஜகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.