பாலஸ்தீன அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!
பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடயே, போரினால் பாதிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெற்று வந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிர்களை இழந்ததற்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம். பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டோம். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை தொடரும்.” என்று பதிவிட்டுள்ளார்.
Google pay sachet loans: ஜிபே மூலம் கடன் பெறலாம்: சிறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதம்!
முன்னதாக, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மோடி பேசினார். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் முழுவதும் 1,300 பேர் பலியான நிலையில், இஸ்ரேல் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி, காசா மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து பாலஸ்தீனிய அதிபருடன் பேசி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளின் தீர்வின் கீழ் சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.