மோடியின் 2.0 ஆட்சியை பிடிப்பதில் மட்டுமல்ல உலகம் சுற்றுவதிலும் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி உலகம் சுற்றுவது விவாதத்திற்குள்ளானது. ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் மீண்டும் வெளிநாட்டு சுற்றுபயணத்திற்கு தயாராகிவிட்டார் மோடி. 

இதனால் பிரதமர் மோடி வரும் ஜூன் மாதத்தில் தமது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார். 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதலில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 44 நாடுகளுக்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். 

பயணதிட்டம் இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர், அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல்15ம் தேதி வரை அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்.அங்கு 3நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். 

ஜூன் மாதம் 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் மோடி, அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு செல்லும் மோடி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், 3-வது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி தாய்லாந்து நாட்டிற்கும்,11ஆம் தேதி பிரேசிலுக்கும் மோடி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.