சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு: பிரதமர் மோடி!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடவுள்ளது. இந்த ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.
சிறப்பு அமர்வின் முதல் நாளான இன்று, இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த தகவல்கள் கூறுகின்றன.
இன்று கூடும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: என்னென்ன மசோதாக்கள் தாக்கல்?
பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். முன்னதாக, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என்றார். “கூட்டத்தொடர் காலம் சிறியதாக இருக்கலாம்; ஆனால், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும்.” என்று பிரதமர் கூறினார்.
அனைத்து உறுப்பினர்களும் சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, "2047ஆம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது. சந்திரயான்-3 விண்கலம் நமது மூவர்ண கொடியை நிலவில் உயர்த்தியுள்ளது. இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும்போது, அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் பல வாய்ப்புகளும் சாத்தியங்களும் இந்தியாவின் கதவுகளைத் தட்டுகின்றன." என்றார்.