பிரதமர் மோடி நான்கு நாட்கள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார். இந்தப் பயணம் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்சில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அமெரிக்காவில் அதிபர் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக இன்று பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.

பிரான்ஸ் - இந்தியா, இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த, பாதுக்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த, வர்த்தகத்தை அதிகரிக்க மோடியின் பயணம் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

முதல்கட்ட பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை பிரான்ஸ் சென்றடைகிறார். வரும் 12ஆம் தேதி வரை பிரான்சில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பிரான்சில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடிக்கு இம்மானுவேல் மாக்ரோன் இரவு உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு:
இந்த உணவு விருந்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் டெக் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நாளை, பிப்ரவரி 11ஆம் தேதி நடக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, இம்மானுவேல் மாக்ரோன் கலந்து கொள்கின்றனர். கடந்த வாரம் இதுகுறித்து செய்தி வெளியிட்டு இருந்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''இந்த உச்சி மாநாட்டில் தலைவர்களின் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் சொந்த முன்னுரிமை பாதுகாப்பான, மனிதாபிமான, பொறுப்பான மற்றும் நம்பகமான முறையில் வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் AI பயன்பாடுகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதுகுறித்து டெக் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி, மான்ரோன் இருவரும் பேசுவார்கள்," என்று தெரிவித்து இருந்தார்.

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் மார்செய்ல்ஸ் என்ற இடத்தில் நாளை இந்திய தூதரகம் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மோடியுண்ட மாக்ரோனும் கலந்து கொள்கிறார். மேலும் மார்செய்ல்சில் இருக்கும் மசார்கியூஸ் போர் நினைவு இடத்திற்கு இரண்டு தலைவர்களும் செல்கின்றனர். முதலாம் உலகப் போரில் இறந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்துகிறார். 

பிரதமர் மோடி, மாக்ரோன் சந்திப்பில் ​​இந்தியாவும் பிரான்சும் அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் சிறிய உலைகள் தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடலாம். இரு நாடுகளும் 2026 ஆம் ஆண்டை இந்தியா-பிரான்ஸ் புதுமை ஆண்டாக அறிவித்து ஒரு லோகோவையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மோடியும் மாக்ரோனும், சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை (ITER) அமைந்துள்ள கடாராச்சேவுக்கு செல்கிறார்கள். இது இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும் ஒரு உயர் அறிவியல் திட்டமாகும்.

இதற்கு முன்பு மாக்ரோனும் பிரதமர் மோடியும் இறுதியாக கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டனர். 2024ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தின விழாவில் மாக்ரோன் கலந்து கொண்டு இருந்தார். இதுவரை இவர்கள் பலமுறை சந்தித்து இருந்தாலும், தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பிப்ரவரி 12 முதல் 14 வரை அமெரிக்கா பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வர்த்தக தலைவர்கள், இந்திய வம்சா வழியினர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

அமெரிக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 'மனிதாபிமானமற்ற முறையில்' நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் மோடியின் அமெரிக்கப் பயணம் அமைந்துள்ளது.