இனி பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை இப்படி அழைப்போம்! புதிய பெயர் சூட்டிய பிரதமர் மோடி!
பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 96 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அது புதுப்பிக்கப்பட்டு ஒரு பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை இனி 'சம்விதான் சதன்' (அரசியலமைப்பு மாளிகை) என்று அழைக்கக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை தனது கடைசி உரையை நிகழ்த்தியபோது இதை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உரைக்குப் பின் பிரதமர் மோடி அனைத்து எம்.பி.க்களையும் பழைய நாடாளுமன்றத்தில் இருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாகப் பேசிய பிரதமர் மோடி, "இன்று, நாம் இங்கிருந்து பிரியாவிடை பெற்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்கிறோம். இன்று மங்களகரமான விநாயக சதுர்த்தியில் இது நடக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் இரு அவைகளின் உறுப்பினர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
"நான் உங்களிடம் முறையிடுகிறேன், நீங்கள் அதை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வதால், இந்த வீட்டின் பெருமை ஒருபோதும் குறையக்கூடாது. இதை 'பழைய நாடாளுமன்றம்' என்று அழைக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளும் அனுமதித்தால், இந்தக் கட்டிடம் 'சம்விதன் சதன்' என்று அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி அழைக்கும்போது அது எப்பொழுதும் நமக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்" என்றார்.
சம்விதன் சதன் என்று அழைக்கும்போது, ஒரு காலத்தில் அங்கு அமர்ந்திருந்த மாமனிதர்களின் நினைவுகளும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு இந்தப் பரிசை வழங்கும் வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1927இல் கட்டி முடிக்கப்பட்டு 96 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளாக, இந்தக் கட்டிடம் இன்றைய தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது.
பழைய நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு அதிக இடம் வழங்கும் விதமாக இது புதுப்பிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.