பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பதில்
பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடுவது தொடர்பாகப் பேசிய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்க்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் தலைமை நீதிபதி சந்திரசூட் உரையின் சிறுபகுதி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும். பிராந்திய மொழிகளிலும் வெளியிட்டால்தான் சாதாரண மக்களும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் இந்திய மக்களில் 99 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகளைப் படித்துப் புரிந்துகொள்ளப்போவது இல்லை.” என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தத் தேவைக்கு தொழில்நுட்ப வசதியை நாம் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்த அவர், புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது முதலில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்றும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
LIC Recruitment 2023: எல்.ஐ.சி.யில் 9394 பேருக்கு வேலை! விண்ணப்பிப்பது எப்படி?
தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து குறித்து பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை. இது பலருக்கும் உதவும். குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. அவை நமது கலாச்சார பன்முகத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்களை தாய்மொழி வழியே கற்கும் வாய்ப்பை வழங்குகிறது” என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.