நாட்டை பிளவுபடுத்தும் காங்கிரஸ்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு அமர்வில் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 5ஆம் தேதியன்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களையில் இன்று பேசினார். அப்போது பேசிய அவர், “ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பேச தொடங்கினார். “அதிகாரப் பேராசையில் ஜனநாயகத்தை வெளிப்படையாகவே கழுத்தை நெரித்த காங்கிரஸ், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இரவோடு இரவாகக் கலைத்த காங்கிரஸ், அரசியலமைப்புச் சட்டத்தை சிறையில் அடைத்த காங்கிரஸ், பத்திரிகைகளுக்குப் பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சிக்கு இப்போது புதிய பழக்கம் வந்து விட்டது. அது நாட்டை பிளவுபடுத்தும் பழக்கம். நாட்டை பிளவுபடுத்தும் கதைகளை உருவாக்கி பரப்புகிறார்கள்.” என்று பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
நாய்கள் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் பொளேர்!
“இது போதாதென்று இப்போது வடக்கையும் தெற்கையும் பிளவுபடுத்துவது பற்றி பேசி வரும் காங்கிரஸ் கட்சி, எங்களுக்கு ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி பற்றி பாடம் எடுக்கிறது.” என பிரதமர் மோடி கூறினார்.
ஓபிசிக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ், பொதுப் பிரிவினரின் ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. பாபா சாகேப் அம்பேதகர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று கருதாத அக்கட்சி, தனது குடும்பத்திற்கு மட்டும் பாரத ரத்னா வழங்கி வந்தது என பிரதமர் மோடி கூறினார். அத்தகைய கங்கிரஸ் கட்சி, இப்போது சமூக நீதிக்கான பாடத்தை நமக்குப் போதிக்கிறார்கள். தலைவர் என்ற உத்தரவாதம் இல்லாதவர்கள் மோடியின் உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நமது நிலத்தின் பெரும் பகுதியை எதிரிகளிடம் ஒப்படைத்த காங்கிரஸ், நாட்டின் ராணுவத்தை நவீனப்படுத்துவதைத் தடுத்து நிறுத்திய காங்கிரஸ், இன்று தேசப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று பேசுகிறது, சுதந்திரத்துக்குப் பிறகும் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்தது. தொழில்கள் அவசியம் அல்லது விவசாயம் அவசியமா? தேசியமயமாக்கல் முக்கியமா? அல்லது தனியார்மயமாக்கல் முக்கியமா? என்பதை காங்கிரஸா முடிவு செய்ய முடியவில்லை. இந்திய பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் 12ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்தை வெறும் 10 வருடத்தில் 5ஆவது இடத்திற்கு நாம் கொண்டு வந்தோம். பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது.” என கேள்வி எழுப்பினார்.
கடந்த வருடங்களில் நடந்த சம்பவங்கள் தனக்கு நினைவிருப்பதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் பிரதமரின் குரல்களை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உங்களால் என் குரலை அடக்க முடியாது. நாட்டு மக்கள் இந்தக் குரலுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். நானும் இந்த முறை தயாராகவே வந்திருக்கிறேன் என்றார்.
ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்
“லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் பேச்சை கேட்கும்போது, சிந்தனையால் கூட அவர்கள் காலாவதியாகிவிட்டது தெரிகிறது. அவர்களின் சிந்தனை காலாவதியாகிவிட்ட நிலையில், தங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்கள்.” என பிரதமர் மோடி சாடினார்.
இவ்வளவு பெரிய கட்சி, பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த கட்சி, இவ்வளவு வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, உங்களுக்கு எங்கள் அனுதாபங்கள். ஆனால், நோயாளி தன்னைத்தானே நோயாளி ஆக்கிக் கொண்டால், மருத்துவர் என்ன செய்ய முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸால் 40 இடங்களைத் தாண்ட முடியாது என்று மேற்கு வங்கத்தில் இருந்து உங்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது; நீங்கள் 40 இடங்களைப் பெற பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.