Modi Speech in Lok Sabha: காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!!
நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு அமர்வில் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த 75வது குடியரசு தினம், புதிய நாடாளுமன்றம், செங்கோல் - இவை அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்றார்.
“புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் குடியரசுத் தலைவர் நம்மிடம் உரையாற்ற வந்தபோது, முழு ஊர்வலத்தையும் செங்கோல் வழிநடத்தியது. நாங்கள் அதன் பின்னால் நடந்து கொண்டிருந்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த புனிதத் தருணத்தை இந்தப் புதிய பாரம்பரியத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதிபலிக்கும் போது, ஜனநாயகத்தின் மாண்பு உயரும்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற உறுதியை பாராட்டுவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கிண்டல் அடித்தார். “நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுகிறேன். பல பத்தாண்டுகளாக நீங்கள் எப்படி அரசாங்கத்தில் அமர்ந்திருந்தீர்களோ, அதேபோன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளீர்கள் அதற்கு பொதுமக்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் துவங்கிவிட்டது. ஒரு குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதை காங்கிரஸ் இலக்காக கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அழிவுப் பாதைக்கு செல்கிறது'' என பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விட்டது. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை. காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு. இளம் எம்.பிக்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது.” என காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையும் என்பதை வலியுறுத்தி பேசிய பிரதமர் மோடி, உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சில இருக்கைகள் மாற்றப்பட்டன, இந்த முறையும் பலர் இருக்கைகளை மாற்ற முயல்வதாக கேள்விப்பட்டேன். லோக்சபாவுக்குப் பதிலாக ராஜ்யசபாவுக்கு இப்போது பலர் செல்ல விரும்புவதாகவும் கேள்விப்படுகிறேன் என்றார்.
சொத்து குவிப்பு வழக்கு: தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சி என்ற பொறுப்பை அவர்கள் (எதிர்க்கட்சி) நிறைவேற்றத் தவறிவிட்டார்கள்; நாட்டிற்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன் எனவும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.
குடியரசுத் தலைவர் உரையில் சிறுபான்மையினருக்கு எதுவும் இல்லை என்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “மீனவர்கள் உங்களுக்கு சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம், கால்நடைகளை மேய்ப்பவர்கள் உங்களுக்கு சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம், விவசாயிகள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை பெண்கள் உங்கள் இடத்தில் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உனக்கு என்ன ஆகி விட்டது? எத்தனை காலம் பிரிவினைகளை நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? எத்தனை காலம் சமூகத்தை பிளவுபடுத்துவீர்கள்?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் ஆமை வேகத்துக்கு யாரும் போட்டியில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பது தனது உத்தரவாதம் என்றார். காங்கிரஸின் வேகத்துடன் நகர்ந்திருந்தால், அதற்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும் எனவும் அவர் கூறினார்.