பிரதமருக்கு லோக் மான்ய திலக் விருது வழங்கப்பட்டது. பரிசு தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு நன்கொடையாக அவர் வழங்கினார்
சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர் திலகரின் 103ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவாக லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், “நாடு முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும்,” என திலக் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது.
அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை பெற்றுக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, “இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த மதிப்புமிக்க விருதை இன்று நான் பெறும்போது, உற்சாகமாகவும் உணர்ச்சி மிக்கவனாகவும் இருக்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில சம்பவங்கள் மற்றும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது.” என்றார்.
லோக் மான்ய திலக் தேசிய விருதினை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் அர்பணிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, பரிசுத் தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், தூய்மை கங்கை திட்டத்துக்கு பரிசுத் தொகையை நன்கொடையாக அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமருக்கு விருது வழங்கும் நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவிந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனிருந்தனர். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பாஜகதான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடியும், சரத் பவாரும் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஒரே மேடையை அலங்கரித்துள்ளனர்.
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் சென்ற பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து, தக்துஷேத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, லோக் மானிய திலக் தேசிய விருதினை அவர் பெற்றுக் கொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
