ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் அனுப்பப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

இதை அடுத்து பிரதமர் மோடி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடலுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்த பிபின் ராவத் மகள்களுக்கு ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து 13 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறினார். அவரை தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மகள்கள் அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் 4 பேரின் உடல்கள் மட்டும் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக அனுப்பப்படவுள்ளதாகவும், மற்ற வீரர்களின் உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
