சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவு!!
சூடானின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, சூடானுக்கான இந்தியத் தூதர் பிஎஸ் முபாரக், எகிப்து மற்றும் ரியாத் தூதர்கள், ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதரி மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், செயலாளர் ( தூதரகம், பாஸ்போர்ட், விசா மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்கள்), வெளியுறவுத்துறை டாக்டர் அவுசப் சயீத் ஆகியோருடன் பிரதமர் மோடி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவாதித்தார். சூடானில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து முதலில் அறிந்து கொண்டார். அவர்களது நலன் குறித்தும் விசாரித்தார்.
கடந்த வாரம் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான 48 வயது இந்தியர் ஆல்பர்ட் அகஸ்டின் உயிரிழப்புக்கு மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.
தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும், முன்னேற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். வேகமாக மாறிவரும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
சூடானில் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்: போர் நிறுத்தம் இதற்குத்தானா?
கர்நாடகாவின் ஹக்கி பிக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பலர் சூடானில் சிக்கியுள்ளனர், மேலும் கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள கர்நாடக மக்கள் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்து இருந்தார். அவருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்து இருந்தார். இது தற்போது அரசியலாக கர்நாடகாவில் மாறியுள்ளது. ஹக்கி பிக்கிகள் பறவை பிடிக்கும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூயார்க்கில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்சை சந்தித்து சூடானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வியாழக்கிழமை ஜெய்சங்கர் விவாதித்தார்.
சூடானின் தலைநகர் கார்டோம் மக்கள் தொகை மிகுந்த அடர்ந்த நகரம். இங்கு கடந்த சில நாட்களாக வான்வழி தாக்குதல்கள் அதிகரித்து காணப்பட்டது. இந்தியர்கள் 4000த்துக்கும் அதிகமாக சிக்கியுள்ளனர். இவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக கார்டோமில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 70 சதவீதம் அளவிற்கு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.