ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு: அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார் பிரதமர் மோடி!
ஜி20 தலைமையை பிரேசில் நாட்டிடம் டெல்லியில் நடைபெற்ற நிறைவு விழாவில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்
ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை கடந்த ஆண்டு இந்தோனிசியாவிடம் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜி20 மாநாட்டுக்கான லோகோ, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் ஆகியவற்றை வெளியிட்டு, ஜி20 தலைமையை ஓராண்டுக்கு இந்தியா ஏற்று நடத்தியது.
ஜி20 இரவு விருந்து: உலகத் தலைவரகளுடன் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, ஜி20 மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டம், டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மட்டும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், சீன ப்ரீமியர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடைபெற்ற 18ஆவது ஜி20 உச்சி மாநாடு மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. நேற்று இரண்டு அமர்வுகளும் இன்று ஒரு அமர்வும் நடைபெற்றன. இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜி20 தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஜி20 தலைமை பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.