பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் இருந்து 56 ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்த கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி இவர் குஜராத்தில் வசிக்கிறார். பிரகலாத் மோடியின், மகள் தமயந்தி, டெல்லியில், குஜராத் சமாஜ் பவனில் தங்குவதற்கு, ஒரு அறையை முன்பதிவு செய்திருந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கிருந்து குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்றார். 

பின்னர், குஜராத் பவனை ஆட்டோ நெருங்கிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண் இமைக்கும் நேரத்தில், தமயந்தியிடமிருந்து பர்சை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதனால், தமயந்தி அதிர்ச்சியடைந்தார். அந்தப் பர்சில் 56 ஆயிரம் ரொக்கம், கிரெடிட், டெபிட் கார்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைத்திருந்தார். மேலும், இந்த கொள்ளை சம்பவம் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இல்லத்தின் அருகே நடைபெற்றது. 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பர்சை திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.