இளம் செஸ் சாம்பியன் குகேஷுடன் பிரதமர் மோடி சந்திப்பு! பரிசு என்ன தெரியுமா?
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நேரில் சந்தித்தார். கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பிரதமருக்கு தனது கையெழுத்திட்ட செஸ் போர்டை பரிசாக வழங்கினார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நேரில் சந்தித்தார். கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பிரதமருக்கு தனது கையெழுத்திட்ட செஸ் போர்டை பரிசாக வழங்கினார்.
குகேஷ் தானும் தன்னுடன் இறுதிப்போட்டியில் விளையாடிய சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் இருவரும் கையெழுத்திட்ட செஸ் பலகை ஒன்றை பிரதமருக்கு வழங்கினார். குகேஷின் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை மற்றும் அமைதியான நடத்தையைப் பாராட்டிய பிரதமர் மோடி, குகேஷின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நாட்டுக்கே பெருமை என வாழ்த்தினார்.
உரையாடலின் போது, பிரதமர் குகேஷ் 11 வயதில் செஸ் சாம்பியனாகும் தனது கனவை வெளிப்படுத்தும் வைரல் வீடியோவை நினைவுகூர்ந்து பேசினார். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்த லட்சிய இலக்கை நிறைவேற்றியதற்காக குகேஷை பிரதமர் மோடி பாராட்டினார். இந்தப் பயணத்தில் யோகாவும் தியானமும் தனக்கு சக்தி அளித்தன என்று குகேஷ் கூறினார்.
செஸ் சாம்பியனான குகேஷின் பயணம் அசாதாரணமானது. டிசம்பர் 12ஆம் தேதி, சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தன்னுடன் கடுமையாகப் போட்டியிட்ட சீனாவின் டிங் லிரனை தோற்கடித்தார். இதன் மூலம் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையைப் படைத்த குகேஷ், 1985 இல் 22 வயதில் சாம்பியன் ஆன ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவின் சாதனையைத் தகர்த்தெறிந்தார்.
மற்றொரு இந்திய செஸ் சாம்பியனும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் குகேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளைக் காய்களுடன் விளையாடிய டிங், 53வது நகர்த்தலில் ஒரு தவறு செய்ததால் பிறகு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார். அவர் செய்த பிழையைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் ஆட்டத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கினார்.