ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி!
ஆன்மீகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

ஆன்மிக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்திநிலையத்தில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மொத்த நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாக கூறினார். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
“ஒருபுறம் ஆன்மீக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன, அதே நேரத்தில் இந்தியா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியா இன்று உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாகும். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய துறவிகள் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' என்ற உணர்வை வளர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பலமுறை புட்டபர்த்திக்கு வந்திருக்கிறேன், ஆனால் இம்முறை வரமுடியவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை ஆசிர்வதிக்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் புட்டபர்த்திக்கு ஆசிர்வாதம் வாங்க வருவேன்; கொடுக்க மாட்டேன். உடல்ரீதியாக உங்களுடன் இல்லாவிட்டாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களுடன் இருக்கிறேன்.” என்றார்.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திநிலையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரைக் கட்டியுள்ளது. ரியூகோ ஹிரா என்பவரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையம், கலாசார பரிமாற்றம், ஆன்மீகம் மற்றும் உலகளாவிய பரிமாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரில், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். அனைத்து தரப்பு மக்களிடையேயான புரிதலை ஊக்கப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியான மண்டபங்கள், தோட்டங்கள் மற்றும் தங்கும் வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.